தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பெஞ்சமின் காலணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் பாதிப்பு கணக்கு எடுக்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவு பெறும். பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புகள் அதிகளவில் உள்ளது.
மேலும் நெல், தென்னை, வாழை எனப் பல்வேறு விவசாயங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் உடைந்துள்ளது. இப்படி நிறையப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிந்து சில இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றாலும், பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. அந்தப்பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில பிரதாண சாலைகளில் மழைநீர் வடிந்து வருகிறது.
ஆத்தூர் போன்ற இடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதால் தான் மின்சாரம் வழங்க இயலவில்லை. அதனைச் சரிசெய்த பிறகு மின்சாரம் வழங்கப்படும். தற்போது வரை, மழைநீர் வடியாத இடங்களில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து இடைவேளையின்றி நடைபெற்று வருகிறது.
முதலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெள்ளத்திலிருந்து வெளியேற்றுவது பெரும் சவாலாக அமைந்தது. பின்னர், நிவாரண முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு மற்றொரு சவாலாக அமைந்தது. இதனைத் தவிர்த்து மக்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக பல்வேறு நிவாரணங்கள், உதவித்தொகைகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்படும் உணவுகள் தவறான இடங்களில் விழுவது என்பது, காற்றின் வேகம் மற்றும் சில காரணங்களுக்காக ஒரு சில பகுதிகளுக்குச் செல்ல முடியாததாலேயே உணவு பொட்டலங்கள் தூக்கிப்போடப்பட்டன. அந்த சூழ்நிலையில், தவறுதலாக வேறு இடங்களில் விழுவது இயல்பு தான். ஆனால், அந்தப் பகுதிகளுக்கும் படகுகள் மூலம் சென்று மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏரல் பகுதியைப் பொறுத்த வரையில், சாலைகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மீட்புப் பணிகளுடன் நேற்று (டிச.21) நேரில் சென்று ஆய்வு நடத்தினோம். தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீர் வடியத் துவங்கியுள்ளதால், போக்குவரத்து துவங்கியுள்ளது" எனக் கூறினார்.
தொடர்ந்து, நிதியை மாநில அரசு சரியாகப் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "மத்திய அரசு முதலில் நிதியை அளிக்க வேண்டும். அதற்குப் பின்பு நிதி சரியாகப் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்று விமர்சிக்கட்டும்" என்று பதிலளித்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: “பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மத்திய நிதியமைச்சர் அவமானப்படுத்தி உள்ளார்” - தங்கம் தென்னரசு பதிலடி!