சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் திரும்ப பெற எதிர்ப்பு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை எதிர்க்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கறுப்பு கொடியேந்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பாஜக அரசுக்கு எதிராக குரல்
திமுக சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கறுப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டும், ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தியும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ”பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், மக்கள் போராட்டமாக நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றப்பட்டதற்கு பாஜக வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது பாஜக அரசு தினமும் உயர்த்தி வருகிறது.
மக்களை பழிவாங்கும் திட்டம்
இதனால் விலைவாசி அதிகரித்து வருகிறது. கரோனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். கரோனா காலத்தில் நமக்கு உணவளித்த விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.
வேலையில்லா திண்டாட்டம், மாணவர்களை பழிவாங்கும் சூழல் என மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் எண்ணப்போக்கு போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்தலிலும் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு
ஒன்றிய அரசுக்கு எதிரான அடுத்தக்கட்ட போராட்டம் திமுக தலைமை முடிவின்படி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
அதே போன்று சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலிலும் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வர வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு என கனிமொழி தெரிவித்தார்.