சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விசாகா கமிட்டியை அமைத்துள்ளது. ராஜேஷ் தாஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு டிஜிபி ராஜேஷ் தாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய மாதர் சங்கத்தினரை சேர்ந்த 50 பெண்கள் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டிஜிபியிடம் மாதர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டீனா, ’வன்கொடுமையின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னரும் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட பெண் அலுவலரை புகார் அளிக்கவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணனையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் விசாரணையை முடித்து ஒரு மாதத்திற்குள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்.பி கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருக்கிறோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மாதர் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் தொடரும்’ என்றார்.
இதையும் படிங்க:பெண் எஸ்.பி பாலியல் புகார்! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!