சென்னை: தரமணி பள்ளிப்பட்டு பஜனை கோயில் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருந்து வருபவர் கீத கிருஷ்ணன். இவரது மனைவி கல்பனா(36). தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக பணிப்புரிந்து வந்தார். இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கீத கிருஷ்ணன் வீடு திறக்கபடாமல் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசித் தொடங்கியதால், வீட்டின் உரிமையாளரான தண்டபாணி கடந்த 10ஆம் தேதி கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கல்பனா தூக்கில் தொங்கிய படி பிணமாக அழுகிய நிலையிலும், மூத்த மகள் குனாளிஸ்ரீ நுரை தள்ளியபடியும் இறந்து கிடந்துள்ளனர்.
உடனடியாக இருவரது சடலத்தையும் மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வீட்டிலிருந்து இரு கடிதங்களை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கோதண்டபானி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களுக்கு லோன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தாங்கள் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவுள்ளதாகவும், தங்களது மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் எனவும் கீத கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்த கோட்டூர்புர் காவல்துறையினர், தப்பியோடிய கீத கிருஷ்ணன் மற்றும் இளைய மகளின் கைப்படத்தை ரயில்வே மற்றும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி தேடி வந்தனர். இறந்த மனைவியின் செல்போனை கீத கிருஷ்ணன் எடுத்து சென்றதால் அதன் ஐ.எம்.இ.ஐ எண்களை வைத்தும் தேடி வந்தனர்.
அதனடிப்படையில் இன்று காலை கோயம்பேடு அருகே பதுங்கி இருந்த கீத கிருஷ்ணனையும், அவரது இளைய மகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், தாய்- மகளை இவர் கொலை செய்துவிட்டு தப்பியோடினாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளனவா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டாது கணவருடன் சேர்ந்து 7 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய தாய்!