ஆவடி அடுத்த சேக்காடு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (30), இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்தத் தம்பதிக்கு இளவரசி (5), நிகிதா (3), தபிதா (9 மாதம்) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி புவனேஸ்வரி, பிறந்து ஒன்பது மாதங்களே ஆன மகள் தபிதாவுடன் வீட்டில் இருந்து மாயமானார்.
இதையடுத்து மறுநாள் ஆவடியை அடுத்த சேக்காடு ஏரியில் புவனேஸ்வரி பிணமாக மிதப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவலர்கள் புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
எனினும் அவரது ஒன்பது மாத பெண் குழந்தைய காணவில்லை. இதையடுத்து அந்த குழந்தையின் உடலை தேடும் பணிகள் நடந்தது.
இந்தப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் குழந்தையை ஏரியில் பல மணி நேரம் தேடினார்கள். ஆனால், குழந்தை தபிதா உடல் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் காவலர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது, புவனேஸ்வரி எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது.
அந்தக் கடிதத்தில், ”எனது நல்ல குணநலன்கள் வீணாகிப் போய் வருகிறது, எல்லாரும் என்னை கோமாளியாக நினைக்கிறார்கள். எனது பிரச்னைக்கு நல்ல முடிவு கொடுக்க வேண்டுகிறேன். எனவே, நான் சாக முடிவெடுத்துள்ளேன்.” என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற விசாரணையில், “குடும்ப பிரச்சனை காரணமாக புவனேஸ்வரி குழந்தையை ஏரியில் வீசி தானும் தற்கொலை செய்துகொண்டது” வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் குழந்தை தபிதாவின் உடலை கண்டுபிடிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தினார்கள். அதில் குழந்தையின் உடல் புதருக்குள் சிக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்தக் குழந்தையின் உடலை ஆறு நாள்கள் போராட்டத்துக்கு பிறகு இன்று (ஜூலை31) மீட்டனர்.
பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: தந்தை புகார்!