சென்னை கொளத்தூர் எம்என் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர்கள் மாலதி அவரது மகள் சர்மிளா. மாலதியின் கணவர் ரமேஷ், இவர்களுக்கு திருமணமான சில வருடங்களே விவாகரத்து ஆகி விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தனர். பொறியியல் பட்டதாரியான சர்மிளா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். மாலதி தனியார் மாவு கடையில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் மாலதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர் . இதனை அடுத்து கொளத்தூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது மாலதியும் அவரது மகள் சர்மிளாவும் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது உடலை கைப்பற்றிய கொளத்தூர் காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் முதற்கட்ட விசாரணையில் மாலதியின் மூத்ததம்பி அசோக்குமார் பெங்களூரு மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர் மூன்று மாதங்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது .
அசோக்குமாருக்கு மாலதியின் மகளை மணமுடிக்க பேசி வந்ததாகவும், இந்நிலையில் அசோக்குமார் இறந்துவிட்டதால் தங்கள் குடும்பத்திற்கு ஆண் துணை இல்லையே என்று சோகத்தில் இருந்துள்ளனர்.
இக்கவலையில் மாலதியும், ஷர்மிளாவும் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் கண்ணாடியில் தங்களது மரணத்துக்கு யாரும் காரணம் கிடையாது என்றும் தாங்கள் தங்கியுள்ள வீட்டின் குத்தகைப் பணத்தை தனது தம்பியிடம் கொடுக்கும்படி எழுதப்பட்டுள்ளது.