சென்னை: கடந்த 2001-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. இதுவரை 80 சதவிகித வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது. தடை காரணமாக விசாரணையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. தடையை நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (அக்.18) விசாரணைக்கு வருவதால், அதன் பிறகு வழக்கை விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் வழக்கை விசாரித்தால் எந்த குழப்பமும் இல்லாமல் வழக்கை தொடர்ந்து நடத்த ஏதுவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், பணப் பரிவர்த்தனை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு இந்த வழக்கை தொடர்ந்து நடத்த ஏதுவாக இருக்கும் என தெரிவித்து வழக்கை நவம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.