சென்னை: பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் சிறார் இலக்கியத் திருவிழாவில் தகுதிபெறும் மாணவர்கள் வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''பள்ளிக் கல்வித்துறை சார்பில், முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களிடம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வாரம் ஒரு நாள் நூலகப் பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்கள் நூலகத்தில் கற்றுக்கொண்டதை வைத்து, அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் சிறார் இலக்கியத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்ட இலக்கிய மன்றங்கள் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளை நடத்தின.
வட்டார, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 152 மாணவர்கள் மாநில அளவிலான பயிலரங்கத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று (மார்ச் 27) முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை படைப்புத்திறனை வளர்க்கும் வகையில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கதை சொல்லிகள் எனப் பலர், பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
மேலும் மொழி வளம், உரைநடை, கட்டுரை, கதை, பேச்சு போன்ற பிரிவுகளில் முழுமையான பயிற்சியும் அளிக்க இருக்கின்றனர்'' என்றார்.
மாநில அளவிலான பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்வியுடன் திறன்களையும் கண்டறிவதற்காக சிறார் இலக்கியப் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற 152 பேர் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், வெளிநாடு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ அதிரடி கைது