சென்னை நகரில் கரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கரோனா பரவலைத் தடுக்க சென்னையில் மாநகராட்சி, சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, காவல் துறை என அனைவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் சென்று கரோனா பாதித்தவரை அழைத்து வருவது, ஊரடங்கு மீறுபவர்கள் மீது நடவடிக்கை என பல்வேறு தடுப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த நிலையில், ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினர், ஆயுதப்படை காவலர், தீயணைப்புத் துறையினர், ரயில்வே காவல்துறையினர், ஊர்காவல் படை என அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 320 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் கூடுதல் ஆணையர் உள்பட 190 காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சைதாப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த காவலர் ஒருவருக்கும் கொத்தவால் சாவடி நுண்ணறிவு பிரிவு காவலர் ஒருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... தேனாம்பேட்டையில் கரோனா பணிகள் குறித்து ஆய்வு!