சரக்கு மற்றும் சேவை வரியில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்றை சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கம், இணக்க மேலாண்மைப் பிரிவு கைதுசெய்துள்ளது.
24 போலி நிறுவனங்களின் வாயிலாக போலி ரசீதுகள் மூலம் ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரிக்கடனை வழங்கியதன் மூலம் ரூ.53.35 கோடியும் மோசடிசெய்யப்பட்டுள்ளது தொழில்நுட்ப உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல் முறையாக, ஒட்டுமொத்த கும்பலையும், அதன் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்த போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றின் மூலம் பலனடைந்த நிறுவனங்கள் குறித்தும், வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.