சென்னை: விமான நிலையத்தில் தொழில், வர்த்தக துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகரித்ததை அடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு ஒப்படைகையில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயணிகள் எண்ணிக்கை 1.8 லட்சமாக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 3,129 சர்வதேச விமானங்கள் மற்றும் 8,962 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் முழுவதும் சென்னை உள்நாடு விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 12,873 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 104 சர்வதேச விமானங்களும், 299 உள்நாட்டு விமானங்களும், மொத்தம் 403 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அதைப்போல் 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னை சர்வதேச உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து, 17.6 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சர்வதேச பயணிகள் 5.02 லட்சம் மற்றும் உள்நாட்டுப் பயணிகள் 12.58 லட்சமாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கை 10,873. அதில் சர்வதேச விமானங்கள் 2,704, மற்றும் உள்நாட்டு விமானங்கள் 8,169. நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 சர்வதேச விமானங்களும் 272 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 362 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
அதைப்போல் 2022 செப்டம்பரில், சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 15.1 லட்சம். அதில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம் மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சம். சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிட்டுகையில், 1,218 விமானங்கள் அதிகரித்துள்ளன. அதைப்போல் பயணிகள் எண்ணிக்கை 1.8 லட்சம் அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை, வியக்கத் தகுந்த விதத்தில் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், தொழில்,வர்த்தக துறையினர் அதிகரித்து வருவதால், இந்த சாதனையை சென்னை விமான நிலையம் படைத்துள்ளது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.