சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சாந்தி நகரில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இதில், 100-க்கும் மேற்பட்ட குடிசைகளில் பலர் வசித்துவருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள முனியப்பன் என்பவருக்குச் சொந்தமான குடிசை வீட்டில் மின்கசிந்துள்ளது. அப்போது, ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதனால், அருகிலிருந்த 10-க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீ பரவியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனால், அதற்குள் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடமைகள், மின்சாதன பொருள்கள், பணம் ஆகியவை தீயில் கருகின. இதனால், வீடுகளைப் பறிகொடுத்தவர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: புளியமரத்தில் மோதி கார் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு!