சென்னை: தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடுகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்குப் பொது முடக்கம் அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மதுபானங்களை வாங்க மதுபானங்களை, மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள மதுபான கடையில் ஏராளமான மதுப் பிரியர்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று மது பாட்டில்கள் வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதில் பலர் முக கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.