இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் சில நாள்களாக குறைந்துள்ளது. கரோனா தொற்றைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டுமே சிறந்தாக இருக்கிறது.
மக்களுக்கு அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் நோய் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு, தற்போது தொற்று குறைந்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலை மேலும் குறைப்பதற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கண்டுபிடிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை முகக்கவசம் அணிவது மட்டுமே மருந்தாகும். பண்டிகை காலங்கள் வருவதால் பொதுமக்கள் கூட்டமாக கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கக் கூடாது. அதேபோல் கடைக்காரர்களுக்கும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளோம்.
அக்டோபர் முதல் டிசம்பர்வரை மழை காலத்தில் மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு போன்ற மழைக்கால நோய்கள் வரலாம். தற்போது சிக்கன்குனியா காய்ச்சல் இல்லை. பொதுமக்கள் மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் விழிப்புணர்வுடன் மழைக்காலத்தில் வரும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் விழிப்புணர்வு அளித்து வருகிறோம்.
மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் இல்லாவிட்டாலும், வீட்டின் சுவர் இடிந்து விழுதல், இடி மற்றும் மின்னல் தாக்குதல் போன்றவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு எட்டாயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஆயிரத்து 800 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மழைகால தொற்று நோய்கள் தற்போது வரை குறைவாகவே உள்ளது.
பொதுமக்கள் சிலநாள்கள் உடல்நிலை சரியில்லாவிட்டால் மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தானாக சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது” என்றார்.