சென்னை: பள்ளிக்கரணையை சேர்ந்தவர் வினோத் (35). இவர் தனது முகநூல் பக்கத்தில், வெளிநாடு சொகுசு கப்பலில் தங்களுடைய தகுதிக்கேற்ப வேலை வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்லீப் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளார்.
வினோத்தை நேர்காணல் நடத்திய அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜா, அவரது உதவியாளர் திவ்யபாரதி ஆகியோர் வினோத்திடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு லட்சம் பணத்தை கம்பெனியின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
வினோத் கடந்த மாதம் 27 ஆம் தேதி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்தது வினோத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வினோத் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இரண்டு பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ராஜா, திவ்யபாரதியை பூந்தமல்லி அருகே போலீசார் கைது செய்தனர்.
அதில் அவர்கள் இதுவரை 43 பேரிடம் 48,80,000 ரூபாய் வரை பணத்தை ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்