சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள தனியார் வங்கியில் இருந்து, 14 கோடியே 48 லட்சத்து 6 ஆயிரத்து 480 ரூபாய் பணத்தை, சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக, முகமது ரியாஸ் (43) என்பவரை, கடந்த 2019ஆம் ஆண்டு சிபிஐ கைது செய்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை உண்மையானதாகப் பயன்படுத்தி, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கு, சென்னை சிபிஐ 12ஆவது சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. ஜாமீன் வழங்கக்கோரி, முகமது ரியாஸ் தாக்கல் செய்த மனுவை, எல்லைக்கு அப்பாற்பட்டு நடந்த இக்குற்றம், நாட்டின் இறையாண்மை, நிதி அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருவேங்கட சீனிவாசன், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு பணமோசடி தடுப்புச்சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் மூன்று மாதச் சிறைத்தண்டனையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் போலியான ஆவணங்கள் மூலம் 57 நிறுவனங்களில் 3,500 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்தது குறித்து, 2016ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கில் முகமது ரியாஸ்க்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு - துரை வைகோ குற்றச்சாட்டு!