சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நடமாடும் மருத்துவமனையில் சுமார் 200 ஊர்தி ஓட்டுநர்கள், 2008ஆம் ஆண்டு முதல் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் தற்காலிகப் பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
ஊர்தி ஓட்டுநர்களிடம் கடந்த 2018ஆம் ஆண்டில் பணிநிரந்தரம் செய்து தருவதாகக் கூறி, அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெ.பார்த்தசாரதி, வெற்றிவேல் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகிய மூவரும் இணைந்து சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூல் செய்து பண முறைகேட்டில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம், அனைத்து மாவட்ட ஊர்தி ஓட்டுநர்கள், நடமாடும் மருத்துவமனை சார்பாக நேற்று (ஜுன் 12) புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு துணை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 205 கோடி ரூபாய்க்கு நிறைவடைந்த விண்வெளிப் பயண ஏலம்!