வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் மூத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா போட்டியிடுகிறார். இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னையில் போட்டியிட வேண்டும் என்பதால் தியாகராய நகர் தொகுதியை தேர்வு செய்தேன். எல்லா தொகுதிகளும் ஒரே மாதிரிதான். எந்த வேறுபாடும் கிடையாது.
தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளில் குப்பை காடாகவும், ஊழல் காடாகவும் மாற்றிவிட்டார்கள். எம்ஜிஆர் மூன்றாம் அணியை உருவாக்கிதான் அப்போதைய மாற்று அரசியலை உருவாக்கினார். இந்த தேர்தலில் மாற்றம் என்பது ஊழலுக்கு எதிரான மாற்றமாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
காங்கிரஸ், திமுக, மதிமுக, அதிமுக என பல கட்சிகளுக்கு மாறிய இவர், வரும் தேர்தலில் மநீம வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை, துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.