சென்னை: டெல்லியில் மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் சட்டப்பேரவை கட்சிகள் குழு தலைவர்கள் சென்றனர்.
இதில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சண்முகம், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோர் சென்றனர்.
முன்னதாக டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, "மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாடு மக்களின் நலனை காக்க மத்திய அரசிடம் எடுத்து சொல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் சட்டப்பேரவை கட்சிகள் குழு நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் செல்கிறோம். தமிழ்நாடு மக்களின் உரிமைகளைக் காக்க முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல முயற்சி எடுத்து வருகிறார்" என்று கூறினார்.