கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான பிரபு, சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவியை அக்டோபர் 5ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார். இச்சூழலில், இவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சுவாமிநாதன், ஆள்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், “எனது மகள் செளந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்துவருகிறார். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டார்.
இது குறித்து காவல் துறையில் புகாரளித்தும், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாரளித்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது. வழக்கைப் பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால், இன்று (அக். 08) வழக்கு விசாரணைக்கு வராததால் மீண்டும் முறையிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் நாளை (அக். 09) பிற்பகல் விசாரணையின்போது நேரில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க...'கட்டுமான பணி நிறைவு சான்று... விதியை நீக்கினால் அனுமதியை மீறுவோருக்கு என்ன தண்டனை?'