டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேற்று முதலமைச்சரை சந்தித்துள்ள நிலையில், அதன்தொடர்ச்சியாக இன்று கலைச்செல்வன் சந்தித்திருப்பது டிடிவி தினகரன் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று பேரும் கடந்த ஒரு வருடங்களாக டிடிவி தினகரன் பக்கம் ஆதரவு தெரிவித்து வந்தனர். முதலமைச்சரை சந்தித்தாலும் அவர்கள் டிடிவி தினகரன் பக்கம்தான் இருந்தனர். மக்களவைத் தேர்தலில் அமமுக பெற்ற தோல்விக்கு பிறகு கலைச்செல்வன் டிடிவி தினகரனை விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, கலைச்செல்வன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபமில்லை. எங்களுக்குள் இருந்தது அண்ணன் தம்பி பிரச்னைதான். மாவட்ட செயலரின் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தோம். நாங்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே திரும்பி இருக்கிறோம். அதிமுகவை வழி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்க ஒருபோதும் நினைத்ததில்லை. முதலமைச்சர் சொல்வதை கேட்டு செயல்படுவோம்" என்று, தெரிவித்தார்.
மேலும் அவர், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது தொகுதி பிரச்னையை பற்றி கோரிக்கை வைத்தேன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர். டிடிவி தினகரன் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. புரிந்து கொண்டு ஒதுங்கி கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியதை என்னால் ஏற்க முடியவில்லை" என்றார்.