மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.ஜி. பிரின்ஸ், "தனது தொகுதிக்குள்பட்ட திங்கள்சந்தை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
அந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். கொடிய நோய்க்கு ஆளாகும் நோயாளிகளைக் குணப்படுத்த தனிச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.
மருந்துகளுக்கு ஜிஎஸ்டி ரத்து
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் உயிர்காக்கும் விலை உயர்ந்த மருந்துகளுக்கு மத்திய அரசு சரக்கு-சேவை வரியை வசூலிக்கிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் தானம் செய்பவர்களை அரசு ஊக்குவிப்பது இல்லை. எனவே இனிவரும் காலங்களில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.