நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்திற்குச் செல்ல தற்போது வரை இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் கரோனாவிற்கு அதிகளவு பாதிப்பிற்குள்ளான சென்னையில் நாளை முதல் (ஆகஸ்ட் 18) டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சென்னையைத் தவிர, பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதாலேயே கரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் உச்சமடைந்ததாக பலரும் குற்றம் சாட்டிவரும் வேளையில், அரசு இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறனர்.
அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், 'சென்னை தவிர, பிற மாவட்டங்களில் கரோனா தொற்று பரவியதில் டாஸ்மாக்கிற்கு பெரும் பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் அதனைத் திறப்பது பெரும் தவறு.
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். அது வைரஸை மேலும் பெருக்கிவிடக் கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.