இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாள்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய - மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை.
இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாள்தோறும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்போர் எண்ணிக்கையும், அதிகமாகிக் கொண்டேதான் போகிறதே தவிர; குறைந்த மாதிரித் தெரியவில்லை. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்று, இதுவரை எடுத்துரைத்து வந்த இரண்டு அரசுகளும், தொற்றுப்பரவல் குறையாத நிலையில், என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கடைசி நிமிடம் வரைக்கும் மக்களைக் காத்திருக்க வைத்திருப்பதும், மக்களைப் பதற்றத்திலேயே வைத்திருப்பதும் மிகமோசமான செய்கைகள் ஆகும். எனவே, எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதனை அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையின் நிலைமை, மிகவும் அச்சம் தருவதாக உள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 203. சென்னையில் மட்டும் 100 உயிர்களை இழந்துள்ளோம்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதலில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும். தினமும் மாலையில் ஏதோ எண்ணிக்கையைச் சொல்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கக் கூடாது. எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என எச்சரிக்க விரும்புகிறேன். வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு இரையாகி விடாதீர்கள் என்பதே எனது அனைத்துக் கோரிக்கைகளுக்குமான உண்மையான அர்த்தம் என்பதை முதலமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.