திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், கணியன் பூங்குன்றனாரையும் மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளை மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்லிச் சிலாகித்துக் கொள்ளும் சிலர், 'பார்த்தீர்களா பாஜகவின் தமிழ்ப்பற்றை' என்று வாய் ஜாலம் காட்டுகிறார்கள்.
இந்தப் பற்று வெறும் சொல்லில்தான் இருக்கிறதே தவிர, செயலில் கிஞ்சித்தும் இல்லை என்பதை நிரூபிக்கிற வகையில் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் வெளியிட்டுள்ள செய்தி அமைந்திருக்கிறது.
இந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் தமிழ் மொழியையும் தமிழர்களையும் மத்திய அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் நிறுவப்பட்டுள்ள தேசிய சமஸ்கிருத மையத்தின் ஊடாக கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 643.84 கோடி ரூபாயை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
சமஸ்கிருதத்தை வளர்ப்பதுதான் அவர்களது நோக்கமும் இலக்குமாக இருக்குமானால் அதனை நாம் குறைசொல்லவில்லை. இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும் தான் இருக்கிறதா? வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா?
பழமைவாய்ந்த உயர் தனிச் செம்மொழியான தமிழை வளர்க்க நிறுவப்பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 22.94 கோடி ரூபாயை மட்டுமே, ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியையோ, ஜிஎஸ்டி வரி மூலமாக வர வேண்டிய தொகையையோ வாங்குவதற்கு துப்பு இல்லாமல் வெறுமனே விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாய்த் தமிழுக்காக நிதி ஒதுக்கீடு வாங்கித் தருவதில் முனைப்பு காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தமிழைவிட முக்கியமான காரியங்கள் அவருக்கு ஏராளமாக இருக்கின்றன.
தமிழை விட சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், மத்தியில் தமிழ் மொழிக்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்து , மொழி உரிமையைக் காப்பாற்றி, பெற வேண்டிய நியாயமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான முதுகெலும்பு இல்லாத மாநில அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது என்பதும் தெளிவாகிறது.
தமிழுக்குப் பெற்றுத் தரப்பட்ட செம்மொழித் தகுதியும், அதற்கான பயன்களும் மத்திய, மாநில அரசுகளின் ஓரவஞ்சனையால் சிதைக்கப்பட்டு வருவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்யும் துரோகம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே, தமிழுக்குரிய நிதியை முழுமையாக ஒதுக்கி, செம்மொழித் தமிழின் வளர்ச்சி செம்மையாக நடைபெற வழிவகுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் மனு தாக்கல்