இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகார துஷ்பிரயோகம் செய்து, பெருமளவு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பான ஊழல் வழக்கிற்காக, உயர் நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவின் ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் வழக்கு வேறு விதமாக அமைந்தால் ஸ்டாலின் ஆறு வருடம் தேர்தலில் நிற்க முடியாது” என்று பேசி, எந்நாளும் நிறைவேறவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
3000 கோடி ரூபாய்க்கு மேலான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிடும் என்று அல்லும் பகலும் அஞ்சுகிறார்; தான் மட்டுமின்றி - தனது அமைச்சர்கள் செய்த ஊழல் - அந்த ஊழலில் தனக்கு வந்த பங்கு எல்லாம், மே மாதத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் கடை வீதிகளுக்கு வந்து நாற்றமெடுக்கப் போகிறதே என்ற பயத்தில் - பிதற்ற ஆரம்பித்து விட்டார் பழனிசாமி.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு மேல்முறையீடு பற்றி “தீர்ப்பு வழங்குவது” போல் பேசியிருக்கிறார் முதலமைச்சர். தீர்ப்பு எப்படி வர வேண்டும் என்ற ஆணவம் இந்தப் பேச்சில் எதிரொலிக்கிறது. முதலமைச்சருக்கு இந்த ஆணவத்தைக் கொடுத்தது எது ? அடித்துக் குவித்துச் சேமிப்புக் கிடங்கில் அடைத்து வைத்துள்ள ஊழல் பணமா? என்ற கேள்வி எழுகிறது.
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கைப் பொறுத்தவரை, ஏற்கனவே உயர்நீதிமன்றம் 549 பக்கம் விரிவாகத் தீர்ப்பளித்து - நான் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று கூறிவிட்டது. என் மீது, தோற்றுப் போன வேட்பாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று, ஒவ்வொரு குற்றச்சாட்டு வாரியாக விசாரித்து - வாதப் பிரதி வாதங்களைக் கேட்டு விரிவாகத் தீர்ப்பளித்து விட்டது. அந்தத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டைச் சுட்டிக்காட்டி, ஒரு முதலமைச்சர், உச்ச நீதிமன்றத்திற்கே கட்டளை பிறப்பிக்கும் வகையில், அதுவும் அரசு விழாவில் நின்று கொண்டு அறைகூவல் விடுத்துப் பேசுவது உச்சக்கட்டமான நீதிமன்ற அவமதிப்பு.
இரு தலைமை என்று ஆட்சியில் அருவருப்பாக அடித்துக் கொண்டது போதும் என்று - முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதிலும் அடித்துக் கொண்டதால் - அதிமுகவிற்குத் தலைமை யார் என்றே தெரியாமல் அதிமுக தொண்டர்களே, திக்குத் தெரியாத காட்டில் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.
“நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற ‘காமெடி’ போல், “நானும் முதலமைச்சர் வேட்பாளர்தான்” என்று மக்களை நம்ப வைக்கலாம் என்ற நப்பாசையில் - உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கினை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் பழனிசாமி பேசி வருவது, “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற விரக்தியில் இருப்பதைக் காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்தித்து - உண்மைகளை நீதிமன்றத்தில் எடுத்து வைத்து வெற்றி பெற்றுவரும் இயக்கம். அப்படித்தான் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான “குட்கா உரிமை மீறல் நோட்டீஸ்” உள்பட பல வழக்குகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொண்டு வருகிறது.
எங்களைப் பொறுத்தமட்டில், இப்போது ஊழல் பெருச்சாளிகளின் சங்கமமாக இருக்கும் அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிந்து, தமிழ்நாட்டை கொடுங்கோலர்களிடமிருந்து மீட்க வேண்டும்; தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும்; தமிழ்நாட்டின் வளர்ச்சியை, 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய மோசடிப் பேர்வழிகளின் முகத்திரையை பொது வெளியில் கிழித்தெறிய வேண்டும்; இதுதான் எங்கள் இலக்கு. அந்த இலக்கை அடைய நாங்கள் தமிழக மக்களை நாள்தோறும் நாடுகிறோம். மக்களுக்காகப் பாடுபட இயன்றதனைத்தையும் செய்கிறோம்.
“நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்கு உழைத்தல்” என்று மகாகவி பாரதி சொன்னதைப் போன்றது எமது பணி ! மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை, கடைகளை எல்லாம் அடைத்து விட்டுச் செய்யும் தீய - பொய்ப் பிரச்சாரங்களின் வாயிலாகத் திசை திருப்பி விட முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மே மாதத்திற்குப் பிறகு பழனிசாமியும் - அவரது சகாக்களும் இருக்க வேண்டிய இடம் எது என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்கள். பழனிச்சாமி அவர்களே, உங்கள் ஆட்சிக்கும், முதலமைச்சர் பதவிக்கும் ‘கவுன்ட் டவுன்’ மணியை மக்கள் அடித்து விட்டார்கள்; அந்த மணியோசை உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.