கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுகவின் சென்னை மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்தும், பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் ரூ.83 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளனர். இதையடுத்து, நிவாரண உதவிக்காக கேரளா செல்லும் வாகனங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கபட்டு வருவதாகவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அங்குள்ள திமுகவினர் பொருட்களை பிரித்து வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் லண்டன் சுற்றுப்பயணம் செல்லும் முனைப்பில் உள்ளதால் நீலகிரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சருக்கு நேரமில்லாமல் இருக்கலாம் என்றும் சாடினார்.
நீலகிரி மறுசீரமைப்புக்கு தன்னுடைய தனிப்பட்ட நிதியை வழங்கியதாக தான் கூறவில்லை என்றும் தங்களுடைய எம்.பி மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கியிருக்கிறோம் எனவும் விளக்கமளித்தார். விரைவில் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு நிதி ஒதுக்குவார் என்று கூறிய ஸ்டாலின், அது என்ன அவர் பாக்கெட்டில் இருந்தா கொடுக்க போகிறார்? மக்களுடைய வரிப்பணம்தானே என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், விளம்பரத்திற்காக நீலகிரியில் ஆய்வு மேற்கொண்டதாக அதிமுக மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் கூறுவதை குறித்து தான் கவலைப்பட போவதில்லை என்றும், எதிர்க்கட்சி என்ற முறையில் அரசை கொஞ்சமாவது செயல்படவைக்கவே முயற்சிக்கிறேன் எனவும் கூறினார்.