அதிமுக அரசிற்கு மத்திய அரசு வழங்கிய நல்லாட்சி சான்றிதழை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "குடிப்பதற்கு எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை. பொதுமக்கள் நடப்பதற்கு நல்ல சாலை வசதிகள் இல்லை.
பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லை. ஊழல் கோட்டையில் உற்சாகமாக வாழும் அமைச்சர்கள் என்று, தமிழ்நாடு மக்கள் அதிமுகவின் பொல்லாத ஆட்சி வீசும் வெப்பத்தில் பொசுங்கி வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழ்நாடு முதல் இடம் என்று மத்திய பாஜக அரசு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
முதலில் மத்திய அரசின் இந்தத் தரவரிசைப் பட்டியல் ஏன் திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது? இந்தத் தரவரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையா? துறைகளின் கீழ் உள்ள அளவுகோல் குறித்த விவரங்களை அளித்தது யார் என்பதெல்லாம், யாருக்கும் தெரியாத ஒரு மர்ம ஆய்வறிக்கை அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
எந்தவித விளக்கமோ? விவரமோ இல்லை. ஆனால், அதிமுக அரசுக்கு அளித்துள்ள இந்தச் சான்றிதழால் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் கேடுகெட்ட அதிமுக ஆட்சிக்கு பிணை கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது" என குற்றம்சாட்டியுள்ளார்.