சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவரும் வரலாறு காணாத மழையின் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று (04.12.2023) மற்றும் நாளை (05.12.2023) ஆகிய இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கி வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியைப் பொறுத்தவரையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையிலிருந்து நிலைமையைக் கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோன்று, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருவாய் நிர்வாக ஆணையர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப் பணிகளுக்குத் தேவையான உத்தரவுகளை வழங்கி, தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், பெருமழையின் காரணமாக மின் கசிவுகள், மின் கம்பிகள் அறுந்து விழுதல் மற்றும் மின்சாரம் தொடர்பான எந்த விபத்துக்களையும் தவிர்த்திடும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு, களத்திலேயே இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கென சென்னையில் மாத்திரம் மின் வாரியத்தைச் சேர்ந்த 600 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1,317 மின் வாரியப் பணியாளர்களும், செங்கல்பட்டிற்கு 2,194 பணியாளர்களும், காஞ்சிபுரத்திற்கு 650 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மொத்தம் 3,831 பணியாளர்களோடு மிக்ஜாம் புயல் பாதிப்பினை எதிர்கொள்ள மேற்படி 8 மாவட்டங்களில் மொத்தம் 8,592 மின் வாரியப் பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருவதற்காக 350 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவை தேவையான பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.
மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்று அபாயத்தை தவிர்க்கவும், தேவையான இடங்களில் மக்களுக்கு சிகிச்சைகள் வழங்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4320 மருத்துவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புயல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை நாளை முதல் விரைவு படுத்த, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 1,000 தூய்மைப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மரங்கள் விழுந்து அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திட 1,238 மரம் அறுக்கும் இயந்திரங்கள் இம்மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 337 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
மேலும், ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது மிக கவனமாக கண்காணிக்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் துவக்கப்பட்டு, அங்கு தங்கியுள்ளவர்களுக்கு இதுவரை 5022 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சமைத்த உணவை பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று வழங்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் நவம்பர் 30ஆம் தேதி துவங்கி இன்று காலை வரை 5,35,080 உணவுப் பொட்டலங்கள் சென்னையில் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 8 இடங்களில் 236 நிவாரண மையங்கள் துவக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 9634 நபர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களை மீட்க காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளைச் சேர்ந்த 725 வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினர் தேவைக்கேற்ப மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் 250 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் குழு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதுமட்டுமன்றி, தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள நீரை அகற்றிட சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் 990 மோட்டார் பம்புகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 190, செங்கல்பட்டு மாவட்டத்தில் 243 என முன்னர் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மொத்தம் 1929 மின் மோட்டார்கள் மழை நீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு துணையாக 906 JCB இயந்திரங்களும், 154 Hitachi இயந்திரங்களும் இந்த 8 மாவட்டங்களில் களப்பணியில் உள்ளன.
இந்த சூழ்நிலையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், மேலும் ஏழு அமைச்சர் பெருமக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.
மழையால் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு:-
வ.எண் | மழை பாதிப்புக்குள்ளான பகுதிகள் | ஆய்வு செய்யும் அமைச்சர்கள் விபரம் |
1. | காஞ்சிபுரம் மாவட்டம் | வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி |
2. | தாம்பரம் மாநகராட்சி | உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி |
3. | ஆவடி மாநகராட்சி | வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் |
4. | கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் | போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் |
5. | வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் | பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி |
6. | வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் | பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு |
7. | சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் | தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் |
8. | திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி | வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி |
குறிப்பாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியுள்ளேன்.
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (டிச.4) காலை 8.30 வரை சென்னையில் 15 இடங்களில் 20 செ.மீ-க்கு மேலாகவும்; குறிப்பாக, பெருங்குடி போன்ற இடங்களில் 29.16 செ.மீ. என்ற அதி கனமழை பெய்துள்ளது. அதேபோல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், அதிகபட்சமாக 27.6 செ.மீ, செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 22.04 செ.மீ. என பல பல பகுதிகளில் கடுமையான மழை பெய்துள்ளது.
அதுமட்டுமன்றி, சென்னையில் இன்று காலை 8.30 முதல் மதியம் 2.30 வரை முடிந்த 6 மணி நேரத்திற்குள் சராசரியாக சுமார் 12 செ.மீ. அளவிற்கு அதி கனமழை பெய்துள்ளது. இந்தப் பெருமழை இன்று இரவு வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத இந்த புயல் மற்றும் பெருமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பொதுமக்களின் துயரைக் குறைக்கும் வகையில், தேவையான அனைத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு திட்டமிட்டு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, தயார் நிலையில் இருந்த பல்வேறு அரசுத் துறைகளின் பணியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய செயல்பாட்டின் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இத்தருணத்தில் என் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மிக சவாலான நேரத்தில் மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இந்த மாபெரும் பணியில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!