வார இதழ் ஒன்றில் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி "500 கோடி தேர்தல் நிதி... சிக்கிய மார்டின்... சிக்கலில் திமுக..!" என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அந்தக் கட்டுரையில், லாட்டரி தொழிலில் மார்ட்டினின் அசுர வளர்ச்சி, மத்திய புலனாய்வு அமைப்பின் சோதனை, காசாளர் பழனிசாமியின் மர்ம மரணம், பழனிசாமி மகன் - மனைவி தரப்பு கருத்துகள், திமுக, அதிமுக, பாஜக கட்சிகளிடம் உள்ள மார்ட்டினின் நெருக்கம், கட்சிகளுக்கு மார்ட்டின் நிதியுதவி வழங்கியது, கணக்கில் வராத 600 கோடி உள்ளிட்டவை குறித்து எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் கட்டுரை தனக்கும், தன் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதால், வார இதழ் நிறுவனம் தனக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.