சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசும்போது, ''ஓராண்டுகாலம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சென்னை சிறைச்சாலையில் அடைபட்டிருந்தபோது, அங்கே திருமண நாளை நானும் கொண்டாடினேன். அவரும் கொண்டாடினார். இது எல்லாம் வரலாறு. இந்த வரலாறு எல்லாம் பலருக்கு இன்னும் புரியவில்லை. அதுவும் நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கே தெரியவில்லை என்றால் எங்கே போய் சொல்வது.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக முப்பெரும் விழா நடைபெற்றபோது, வேணுவுக்கு கலைஞர் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறோம் என்பதும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நெருக்கடிநிலை நேரத்தில் திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு 500-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு முழுவதும் சிறைபிடிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், சென்னை சிறைச்சாலையில் நானும், பொருளாளர் டி.ஆர்.பாலு , மற்றவர்களும் அடைப்பட்டிருந்தபோது, எங்களோடு இருந்தவர்தான், வேணு. எனவே அப்படிப்பட்ட ஒரு தியாகச்சீலராக இருக்கும் வேணுவின் பேத்திக்கு இன்று மணவிழா நிகழ்ச்சி.
திமுக குடும்ப அரசியல் தான் செய்கிறது: இன்றைக்கு முக்கியப் பொறுப்பில் பிரதமராக இருக்கும் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உரையாற்றி இருக்கிறார். குடும்ப அரசியலை நாம் நடத்திக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்; உண்மை தான். இது குடும்ப அரசியல்தான். திமுக என்பது குடும்பம் குடும்பமாக இருக்கிறது. அதை அவர் சொன்னதற்காக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அத்தோடு நிறுத்தாமல், குடும்பம் குடும்பமாக அரசியலை நடத்திக் கொண்டு, அவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தொனியில் பேசியிருக்கிறார்.
தம்பி Vs உடன்பிறப்பே: அறிஞர் அண்ணா இந்த இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில் நம்முடைய உடன்பிறப்புகளை - திமுக தோழர்களை எல்லாம் “தம்பி… தம்பி…” என்றுதான் உரிமையோடு அழைத்தார்கள். அதைத்தொடர்ந்து கருணாநிதி திமுக தோழர்களை எல்லாம் - கழகத் தோழர்களை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை உடன்பிறப்புகளையும் “உடன்பிறப்பே… உடன்பிறப்பே…’’ என்றுதான் - அது ஆண்களாக இருந்தாலும் - மகளிராக இருந்தாலும் - தங்கையாக இருந்தாலும் - அக்காவாக இருந்தாலும் - அண்ணனாக இருந்தாலும் - தம்பியாக இருந்தாலும் - யாராக இருந்தாலும் அத்தனை பேரையும் “உடன்பிறப்பே… உடன்பிறப்பே…’’ என்று ஒட்டுமொத்தமாக அழைத்து அந்த உணர்வை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். எனவே, இது உள்ளபடியே குடும்ப அரசியல்தான்.
திமுக மாநாடும் குடும்பங்களும்: திமுக மாநாடுகளைப் பல்வேறு வகைகளில் - பல்வேறு மாவட்டங்களில் - பல்வேறு நேரங்களில் நாம் நடத்தி இருக்கிறோம். அந்தக் கழக மாநாடுகள் நடத்துகிறபோது மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்றெல்லாம்கூட நடத்தியிருக்கிறோம். அப்படி மூன்று நாட்கள், நான்கு நாட்கள் நடத்தும் அந்த மாநாட்டிற்குக் குடும்பம் குடும்பமாக வாருங்கள் என்றுதான் தலைவர் கருணாநிதி அழைப்பார்கள். குடும்பம் குடும்பமாக வருவார்கள். அந்தப் பந்தலிலே உட்கார்ந்து உணவு அருந்துவார்கள். கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்து, அந்த பந்தலிலேயே தொட்டில் கட்டி, அந்த தொட்டில் ஆட்டும் காட்சிகளை எல்லாம் தலைவர் பார்த்துப் பரவசம் அடைந்திருக்கிறார்கள்.
ஏதோ மாநாட்டிற்கு மட்டுமல்ல, போராட்டத்திற்குக்கூட குடும்பம் குடும்பமாக பங்கேற்று, சிறை சென்று பல கொடுமைகளை எல்லாம் அனுபவித்திருக்கிறோம். இது திராவிட இயக்கத்தில் இருக்கும் வழக்கம். ஆனால், இன்றைக்கு நாட்டின் பிரதமராக இருப்பவர் என்ன சொல்லுகிறார் என்று சொன்னால், ‘திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம்தான் வளர்ச்சி அடையும்’ என்று பேசியிருக்கிறார். ஆம், கருணாநிதியின் குடும்பம் என்பதே இந்த தமிழ்நாடுதான். தமிழர்கள் தான்.
50 ஆண்டு காலமாக திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கும் அந்த நிலைகள் எல்லாம் பார்த்துவிட்டு, பிரதமர் பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் யார் என்றால் கருணாநிதி. இன்றைக்கு நூற்றாண்டு விழாவை அவருக்காக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பட்டியலை - சாதனைப் பட்டியலை போட்டால் நேரம் போதாது. அவ்வளவு பெரிய பட்டியல் இருக்கிறது.
மிசாவும் கருணாநிதியும்: அந்த வழியில்தான் இன்றைக்கு ஆறாவது முறையாக ஆட்சி – ‘திராவிட மாடல் ஆட்சி’யாக தலைவர் கருணாநிதி வழிநின்று நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். குடும்பம்… குடும்பம்… என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, ஒரு வருடம் மிசாவில் அடைக்கப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில், அந்தச் சிறையில் இருக்கும் தோழர்களை எல்லாம் அந்தக் குடும்பத்தைச் சார்ந்திருக்கும் உறவினர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் வந்து முறையாக சந்திப்பது வழக்கம். ஆனால், சென்னை சிறைச்சாலையைப் பொறுத்தவரை இரண்டு மாத காலம் அதற்கு அனுமதி தரவில்லை.
ஆனால், அனுமதி உண்டு. நியாயமாக சட்டப்படி அனுமதி தந்தாக வேண்டும். ஆனால், அனுமதி தரவில்லை. தலைவர் கருணாநிதி அறிக்கை விட்டார்கள். ‘அனுமதி தரவில்லை என்று சொன்னால் சிறைவாசலில் சிறையில் இருப்பவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். என்னுடைய தலைமையில் நடைபெறும்’ என்று தலைவர் கருணாநிதி அறிவிக்கிறார்கள். அதற்குப்பிறகு அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டு அனுமதி தந்தார்கள்.
முதல் அனுமதி யாருக்கு என்றால் எனக்குதான் கிடைத்தது. கருணாநிதி வந்து பார்க்க வேண்டும். ஆனால், தலைவர் கருணாநிதி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். சிறையில் இருக்கும் அனைவரும் பார்த்ததற்குப் பிறகுதான் என்னுடைய மகன் ஸ்டாலினை நான் பார்க்க வருவேன் என்று சொன்னவர் கருணாநிதி.
எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால், என்னை மட்டும் மகனாகக் கருதவில்லை அவர், சிறையில் இருக்கும் அத்தனை பேரையும் மகனாகக் கருதியவர். எனவே குடும்ப அரசியல் என்று பொருத்தமாகத்தான் நம்முடைய பிரதமர் சொல்லி இருக்கிறார். அவருக்கு இப்பொழுது ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 23ஆம் தேதி பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்கள் பாட்னாவில் ஒரு கூட்டத்தை கூட்டினார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு தேர்தல் வியூகத்தை அமைக்க வேண்டும். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை எந்த வியூகத்தோடு சந்திப்பது என்பதைப் பற்றி யோசிக்க, கலந்துபேசிட முதற்கட்டமாக, முதல் கூட்டமாக அந்த முயற்சி எடுத்து அந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.
பற்றி எரியும் மணிப்பூர்: எனவே அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம்தான், இன்றைக்கு பிரதமர் மோடி இறங்கி வந்து பேசும் சூழல் உருவாகி இருக்கிறது. நான் கேட்கிற கேள்வி எல்லாம், மணிப்பூர் மாநிலம் - இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆளுகிற மாநிலம். அந்த மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட 50 நாட்களுக்குப் பிறகுதான் அமித் ஷா நடத்தி இருக்கிறார். இதுதான் ஒன்றியத்தில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சணம்.
இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார். எனவே ஒரு நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும். மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார், நம்முடைய மோடி . எனவே மதப் பிரச்சனையை அதிகம் ஆக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார். நான் உறுதியோடு சொல்கிறேன், நிச்சயமாக உறுதியாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். தயாராகி விட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை உங்கள் மூலமாக, இந்த திருமண நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, நீங்களும் தயாராக இருக்க வேண்டும், உறுதியோடு இருக்க வேண்டும். இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆளுகிற உங்கள் ஆட்சி - திராவிட மாடல் ஆட்சி, தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை எடுத்துச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறோமோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இது தொடர, எப்படி தமிழ்நாட்டில் ஒன்று சேர்ந்து, நம்முடைய ஆட்சியை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி - மதச்சார்பற்ற ஒரு ஆட்சி - நமக்காகப் பாடுபடும் ஒரு ஆட்சி - மாநில உரிமைகளை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கும் நிலையில் நடைபெறும் ஆட்சி உருவாகுவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக வேண்டும்… தயாராக வேண்டும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை