இன்றைய சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் க.அன்பழகன், "நகைச்சுவை என்ற பெயரில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் ”தளபதி, தளபதி என்று கூறுகிறீர்களே அவர் எந்த படைக்குத் தளபதி என்று கேட்டு முடிந்தால் என் தொகுதியில் நின்று வென்று காட்டட்டும்” என்று கூறினார்.
அதற்கு பதில், இப்போது நான் கூறுகிறேன். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தளபதியாக தலைமை ஏற்று, சாதாரண தொண்டனாக ஐட்ரீம்ஸ் மூர்த்தியை வைத்து அவரை எதிர்த்து நிற்க வைத்து வென்று காட்டிய தலைவர், இங்கே சாந்தமாக அமர்ந்திருக்கிறார்.
ஆனால் அவரிடம் சவால் விட்ட அந்த முகத்தை சட்டப்பேரவையில் காணவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ”மானியக் கோரிக்கைக்கு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் 15 நிமிடம்தான் ஒதுக்கப்படுகிறது. எனவே அந்த நேரத்திற்குள் பேச வேண்டும் என்பதை இப்போது பேசிய உறுப்பினர் அன்பழகனுக்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்" என்றார்.
விவாதத்துக்குள் குறுக்கே புகுந்த எடப்பாடி
இதனையடுத்து எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "2017ஆம் ஆண்டு ஆளுநர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார், அப்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் கூறினார்.
எடப்பாடியை அழைத்த மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "விவாதம் செய்ய வேண்டாம் என்பதற்காக தான் உறுப்பினரை தடுத்து நிறுத்தினேன், நீங்கள் விவாதம் செய்யத் தயார் என்றால் நாங்களும் தயார்" என்றார்.
முதலமைச்சருக்கு நன்றி கூறுங்கள்...
இதைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "இந்த விவாதம் வேண்டாம் என்பதற்காக தான் முதலமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார். அவருக்கு நீங்கள் நன்றிதான் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.
விவாதத்துக்கு எண்ட் கார்ட்!
உடனே சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு இந்த விவாதத்தை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: 'ஆன்மீக தொலைக்காட்சிக்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை'