நோய்த் தொற்று மற்றும் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், அதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
" மழை பெய்யும் போதெல்லாம் தொற்று நோய் பரவுவது இயல்பு, அதனைத் தடுக்க உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் டெங்கு ஒழிப்பு பணிகளிலும், 66 ஆயிரம் பேர் தொற்று நோய் தடுப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐந்தாயிரத்து 890 பெரிய புகை பரப்பு இயந்திரங்கள் மற்றும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறிய ரக புகை பரப்பு இயந்திரங்கள் டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொசுக்கள் பரவாத வகையில் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
இதுவரை டெங்கு பாதிப்பால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. டெங்கு கொசுக்கள் உருவாகாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். நோய்த் தொற்று மற்றும் டெங்கு பரவாமல் தடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட, தினந்தோறும் 870 எம்.எல்.டி தண்ணீர் சென்னைக்கு வழங்கும் அளவிற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.