சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பயன்படும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை சுரங்க பாதைக்கு மேலே மேம்பாலம் அமைக்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தொடர் கண்பாணிப்பு மையத்தையும் தொடக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்நாடு அரசு எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் கரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று குணமடைவோர் விகிதம் 94 விழுக்காடாக உள்ளது. இதுவரை சுமார் 25 ஆயிரம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே ஸ்டான்லி மருத்துவமனையில் 800 படுக்கைகள் உள்ள நிலையில் அதிநவீன மருத்துவ வசதிகள் அடங்கிய 400 படுக்கைகள் கொண்ட வார்டு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயிரத்து 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சைக்கு 75 ஆயிரம் படுக்கைகள் முதன் முதலாக அமைக்கப்பட்டன. பின்னர் அது ஒரு லட்சத்து 25 ஆயிரமாக அதிகப்படுத்தப்பட்டு தற்போது கரோனா சிகிச்சைக்காக ஒரு லட்சத்து 42 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிநவீன உபகரணங்களை கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், “கரோனாவை தடுக்க கையில் இருக்கும் ஆயுதமான முகக் கவசத்தை மக்கள் கட்டாயம் அணிய வேண்டும். நோய் அறிகுறி இருந்தால் கட்டாயம் பரிசோதனைக்கு மக்கள் வரவேண்டும். தனக்கு இந்த நோய் இருக்காது என நினைத்து நுரையீரல் பாதிப்பு அதிகமான பிறகு சிகிச்சைக்கு வரும்போது அது சிகிச்சை மேற்கொள்ள சவாலான செயலாக அமைந்துவிடுகிறது. எனவே சிறிய அளவிலான காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வாருங்கள்" என்றார்.
இதையும் படிங்க...அரியலூர் மாணவன் தற்கொலை: ரூ. 7 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை!