சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அரசு முழு கவனத்துடன் அனைத்துத் துறைகளையும் இணைத்து கவனத்துடன் செயல்பட்டது. இந்தியாவில் பிற மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் என இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் 10 சதவீதமாக இருந்தது. அது கடந்த வாரம் 4 சதவீதமாக குறைந்து. தற்போது 3.5 சதவீதமாக உள்ளது. நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முதலமைச்சர் வியூகம் அமைத்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். வளர்ந்த நாடுகளும் கரோனாவின் இரண்டாவது அலையில் தடுமாறி வரும் நிலையில், இவ்வியூகம் கை கொடுத்துள்ளது.
வளர்ந்த நாடான ஐரோப்பாவில் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் நபர்களும், அமெரிக்காவில் 1 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர் . தமிழ்நாட்டில் நோய் தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் ஒரு கோடி பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துள்ளது.
இங்கு 10 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்கி வருகிறோம். சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளோம். தமிழக அரசு சார்பில் 80 சதவீதம் ஆய்வகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் பரிசோதனை நிலையங்களில் 20 சதவீதம் பேருக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சர்வதேச அளவில் சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அறிவித்து இறப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளோம். மேலும், காய்ச்சல் கண்காணிப்பு முகாம்கள் நடத்தி நோய் தொற்றினை கண்டறிந்துள்ளோம். சிறப்பு திட்டத்தின் மூலம் முகக்கவசம் அணியாத 10 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 8 கோடியே 16 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளோம். பண்டிகை காலங்களில் நோய் தொற்று அதிக அளவில் பரவும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து தீபாவளி கொண்டாட வேண்டும்.
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் கலந்தாய்வு நடத்தப்படும். தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டினார். ஆனால் ,எதிர்க்கட்சித் தலைவர் பாராட்ட மனம் இல்லாமல் குறை கூறுகிறார் என்றார்.