எலியட்ஸ் அருங்காட்சியகத்தில் கண் மருத்துவமனை துவக்கப்பட்ட பொழுது பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கருவிகள், மருத்துவ உபகரணங்களின் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண் அறுவை சிகிச்சை கருவிகள், அவர்கள் பயன்படுத்திய மேசை, நாற்காலிகள், கண்களின் செயற்கை வடிவமைப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் 200ஆம் ஆண்டு நினைவு விழா மலரை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் 200-வது நினைவு ஆண்டில் சிறப்பம்சமாக 66 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கட்டடம் கட்டப்படவுள்ளது. இங்கு அமைந்துள்ள அருங்காட்சியகம் நல்ல முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் மருத்துவ சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 88 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்றாவது அடுக்கு மாடிக் கட்டடத்தை முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார். தமிழ்நாடு அரசின் அழுத்தத்தின் காரணமாகவே வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இருந்தாலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் எந்தவித தொய்வும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
செங்கல்பட்டில் மருத்துவத்துறைக்குத் தேவைப்படும் உபகரணங்களைத் தயாரிக்க மருத்துவப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது முதல்வரின் கனவுத்திட்டம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது" என்றார்.
இதையும் வாசிங்க: பொது இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய அரசு முன்வர வேண்டும் - தொல். திருமாவளவன்!