சென்னை: தமிழ்நாட்டின் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) மற்றும் மாநில நிதி பங்களிப்புடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.477.70 கோடி மதிப்பீட்டில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அரசு மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து நாமக்கல் கவிஞர் மாளிகை 5 ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (17.11.2022) ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA), தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையால், கட்டப்படும் கட்டடங்களில், வரைபடம் திட்டம் மதிப்பீடு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் ஆலோசகர்களின் உதவியுடன் உடனுக்குடன் தயாரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி (JICA) உதவியுடன் நடைபெறும் அனைத்து மருத்துவமனை கட்டடங்களும் விரைவாக கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பணியில் உள்ள இடர்பாடுகள் களைய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஒன்றிணைந்து அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில், கட்டுமானப் பணிகளில் ஆறு தளங்கள் நிறைவு பெற்று விட்டன என்றும், அறுவை சிகிச்சை அரங்க கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவ வாயு குழாய் பதிக்கும் பணி ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி உதவியின் மூலம் கட்டப்பட்டு வரும் ஏழு அரசு மருத்துவமனைகளிலும் விரைவாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆவடி அரசு மருத்துவமனையில், நான்கு தளங்கள் கட்டி முடிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் கட்டட உட்புற பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை மருத்துவமனையில், செங்கல் மற்றும் பூச்சுப் பணி இரண்டாம் தளத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் செங்கல் கட்டுமானம் ஐந்தாம் தளத்தில் நடைபெற்று வருகிறது.
இக்கட்டுமானப் பணிகளை எல்லாம் விரைவாக முடித்து பிப்ரவரி 2023-க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆணையிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை, முதன்மைச் செயலாளர் க.மணிவாசன் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: விரைவில் மருத்துவர்கள் கைது?