தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 595 அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இச்சேவை மையங்கள் தலைமைச் செயலகம், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடம், மண்டல அலுவலகங்கள் மற்றும் சில கோட்ட அலுவலகங்களிலும் செயல்பட்டுவருகின்றன.
இச்சேவை மையங்கள் வாயிலாக அரசின் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அரசு இ-சேவை மையங்கள் இல்லாத நகர்புறப் பகுதிகளில், பொதுமக்கள் அரசின் சேவைகளை எளிதில் பெறும் வண்ணம், விருப்பமுள்ள தனியார் வலைதள மைய (Browsing centre) உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உரிமம் பெற்ற இ-சேவை மையமாக (Franchisee) செயல்பட 2018ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இதையடுத்து தகுதியான மையங்களுக்கு தமிழ்நாடு மின்னாளுமை முகமை வாயிலாக பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல் வழங்கப்பட்டு தனியார் இ-சேவை மையங்கள் செயல்பட்டுவருகின்றன.
இவ்வாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற சில தனியார் இ-சேவை மையங்கள், பொது மக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த சேவைக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அந்தத் தனியார் இ-சேவை மையங்களின் பயனர் குறியீடு எவ்வித முன் அறிவுப்பும் இன்றி உடனடியாக முடக்கம் செய்யப்படும்.
மேலும், இந்நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களிலும், இந்நிறுவனத்தின் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாகப் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், பொதுமக்கள் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911 -க்கு
தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெற்றி வேல் யாத்திரை; முழு விவரங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க பாஜகவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!