சென்னை, அண்ணா சாலையிலுள்ள மின் ஆளுமை ஆணையர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்தை காலத்திற்கு ஏற்றவகையில், மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், விவசாயம் போன்றவற்றில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
”எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே என்ன பிரச்னை?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இருவரும் அண்ணன் தம்பிகள் போல உள்ளனர். இருவருக்கும் இடையில் எவ்வித பிரச்னையும் இல்லை. எந்த ஒளிவுமறைவும் இல்லை” என அவர் பதிலளித்தார்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், ஓ.பன்னீர் செல்வம் குறித்தும் விமர்சித்த உதயநிதி ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ”உதயநிதி ஸ்டாலின் என்ன இளவரசரா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
”அமைச்சர்கள் மாறி மாறி ஆலோசனை நடத்தக் காரணமென்ன?” என்ற கேள்விக்கு, ”இது வழக்கமான சந்திப்புதான். ஊடகங்கள்தான் இதைப் பெரிதாக்குகின்றன. அரசியல் வியூகங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதில் எவ்வித ஒளிவுமறைவும் இல்லை. ஓபிஎஸ் தன்னை முதலமைச்சராக அறிவிக்கவேண்டும் என எந்த இடத்திலும் கோரிக்கை வைக்கவில்லை. செயற்குழுக் கூட்டத்திலும்கூட தன்னை முதலமைச்சராக அறிவிக்குமாறு அவர் கோரிக்கை வைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சி சார்ந்த கருத்துகளையே முன்வைத்தார்” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: ’நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன்’ - ஓபிஎஸ் பகீர்