சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள வேளச்சேரி நீச்சல் குளத்தின் வளாகத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்துகின்ற வகையில் 50 மீ. நீச்சல் குளம், பயிற்சி பெறும் வகையில் 25 மீ. நீச்சல் குளம் மற்றும் டைவிங் நீச்சல் குளம் ஆகியவை உள்ளன. அதோடு சிந்தடிக் இறகுப்பந்துக் கூடம், ஜிம்னாஸ்டிக் அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூடம் ஆகியவையும் உள்ளன.
இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் நீச்சல், இறகுப்பந்து மற்றும் ஜிம், உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளச்சேரி நீச்சல் குளத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பிட்டில் நடைபெற்று வருகின்ற உபகரணங்கள் அமைக்கும் பணியினை இன்று (பிப். 11) ஆய்வு செய்து, பார்வையாளர்கள் அமரும் இடம், இறகுப்பந்து கூடம், ஜிம்னாஸ்டிக் அரங்கம், உடற்பயிற்சி மையம் மற்றும் கழிப்பறை வசதிகளை பார்வையிட்டார்.
மாணவர்கள், பொதுமக்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்து, பார்வையாளர்கள் அமரும் இடம் மற்றும் கழிவறை கட்டமைப்பு வசதிகளை நல்ல முறையில் பராமரித்திடவும், தேவையான மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:ind vs aus test: 226 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா அபாரம்!