சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 120-க்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதன்பின் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அந்த வகையில் சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைத்தல், 230 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி, பழைய கழிவுநீர் அமைப்பினை இணைக்கும் பணி, மற்றும் 370 மீட்டர் நீளத்தில் கழிவுநீர் உந்து குழாய் அமைக்கும் பணி என 4 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தேனாம்பேட்டை மண்டலம் பகுதி 27 வார்டு 116-க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வைத்தார்.
தொடர்ந்து, ராயபுரம் மண்டலம், வார்டு 62-க்குட்பட்ட பம்பிங் ஸ்டேசன் சாலை மற்றும் ரிச்சி தெரு சந்திப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிவறையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது மேயர் ஆர்.பிரியா, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் ரா. மங்கை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: CM-க்கு கோரிக்கை விடுத்த மாணவி; உடனடியாக சென்னை மருத்துவமனையில் அனுமதி