நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜ்: மதுக்கடைகளை மூடுவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. மது விற்பனை வருவாய் அதிகமாக இருக்கிறது. மது விற்பனை வருவாயை நம்பித்தான் அரசு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி: "ஒரே கையெழுத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவோம் என்று எந்த ஒரு இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. படிப்படியாகத்தான் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறியுள்ளோம். மது விற்பனை வருவாய் என்பது திமுக ஆட்சி காலத்திலும் அதிகமாகத்தான் இருந்தது. விலைவாசி அதிகரிப்பதற்கு ஏற்ப அதன் வருவாயும் அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார்
இதனையடுத்து மீண்டும் பேசிய மனோ தங்கராஜ்: பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடந்த ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், மூலதன செலவாக வெறும் 1.2 விழுக்காடு மட்டும்தான் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 93 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும், நீட் தேர்வில் வெறும் நான்கு பேர் மட்டுமே தேர்வு பெற்றிருக்கின்றனர். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் குறைவாகவே சேர்கின்றனர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்: "இந்தியாவிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பயிற்சி அளிக்கப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான். சுமார் 117 கோடி ரூபாய் செலவில் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தைவிட தாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்" என பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'ரூ.2500 சம்பளத்துல என்ன செய்ய முடியும்? சம்பளம் தர மறுக்கும் நகராட்சி' - கண்ணீர் வடிக்கும் பெண்கள்