சென்னை மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் தங்கமணி மின் மேலாண்மை, மின் கட்டமைப்பு மற்றும் பகிர்தல், மின் அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
ஊரடங்கு தளர்வை முன்னிட்டு சிறு, குறு தொழில்கள் 06.05.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தடையின்றி மின் விநியோகம் செய்தல் குறித்து, அமைச்சர் மின்வாரிய அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நாளை (06.05.20) முதல் தொழிற்சாலைகள் இயங்கப்பட உள்ளதால், தேவையான மின் இருப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மின்சாரத்துறை அலுவலர்கள் மிகவும் விழிப்புடன் பணியாற்றவும், மின் தடங்கல் ஏற்படும் பட்சத்தில் அவற்றை உடனுக்குடன் சரி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் கேட்டுக்கொண்டார்.
மேலும், கரோனா தொற்று ஏற்படாதபடி மின்சாரத்துறை ஊழியர்கள் செயல்பட அவர்களுக்குத் தேவையான கையுறைகள், சானிடைசர்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையும் பார்க்க: பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி