சென்னை: டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஒருவார காலம் அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளது.
நாளை (ஏப்.23) அதிகாலை சென்னையில் இருந்து டென்மார்க் புறப்படும் குழுவில் தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் செல்ல உள்ளனர். டென்மார்க் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காற்றாலை தொடர்பான நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளனர்.
அதைத் தொடர்ந்து பின்லாந்து செல்லக்கூடிய தொழில் துறை குழுவினர், நோக்கியோ , ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் நிறுவனங்களையும் சந்திக்க உள்ளனர். நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் ஏற்கனவே இங்கு ஆலையை நிறுவியுள்ளதால் அதன் விரிவாக்கத்திற்கு இந்த பயணம் முக்கியம் பங்கு வகிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் இருந்து எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அநநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளனர். மூன்று நாடுகள் பயணம் என்பது ஜனவரி மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான முன்னோட்டமாக அமையும் என்று குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா: பன்னாட்டு முதலாளிகளுக்காக நவீன காலத்தில் பணிச்சுமையை அதிகரிப்பதா? - மநீம காட்டம்
நேற்று (ஏப்.21) 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதற்கான புதிய சட்ட திருத்த மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பும் செய்தன.
இதனிடையே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வமும் இந்த சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அவைத்தலைவர் அப்பாவு தலைமையில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகவும், வாரத்தில் 4 நாட்கள் வேலையும், 3 நாட்கள் விடுமுறையும் எடுக்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டம் 1948-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆங்காங்கே எதிர்க்கட்சியான அதிமுக உட்பட திமுகவின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விசிக, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் என இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளன.
இதனிடையே, இது குறித்து இந்த 12 மணி நேர வேலை மசோதா தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் செயலாக உள்ளது என்றும் ஆகவே, இதை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அரசை வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், உலக நாடுகளில் பலரின் உயிர்த் தியாகங்களுக்கு பிறகு, இந்த 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமை கிடைத்ததாகவும், இந்திய தொழிலாளர்களுக்கு 1945-ல் சட்டப்பூர்வமாக சட்டமேதை அம்பேத்கர் பெற்றுத் தந்தார் என்றும் சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சி கருணாநிதி, 8 மணி நேரம் வேலை என்பதை குறைத்து 6 மணி நேரமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்றும் நினைவுறுத்தியுள்ளது.
மேலும், பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்கானது என்றும் உடனே இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனவும் மநீம வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறைக்கான அமைச்சர் தங்கம்தென்னரசு அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வாரம் செல்ல உள்ளது பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 12 மணி நேர பணி குறித்த சட்டத்திருத்த மசோதா.. கம்யூனிஸ்ட்கள், விசிகவினர் வெளிநடப்பு!