சென்னை: 'நீங்கள் எத்தனை முகமூடிகள் போட்டுக்கொண்டு வந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இருக்கின்ற இடம் தெரியாது என்பது உறுதி' என தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அங்கு திமுக சார்பில் அமைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் பணிகளுக்கான அலுவலகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று (பிப்.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு, "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் சேர்ந்து அடித்த கொள்ளையைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இயக்கத்தை பாஜகவிடம் அடகு வைத்து விட்டனர்.
அதேபோல, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு (NEET Exam) மற்றும் உதய் மின் திட்டங்களை (Ujwal DISCOM Assurance Yojana) ஏற்கவில்லை. காவிரி பிரச்னையில் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்துகொண்டு விவசாயிகளை எடப்பாடி அரசு வஞ்சித்தது. குடியுரிமை சட்டத்தை (CAA) எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஆதரித்ததோடு, அதில் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றது’ எனக் கூறினார்.
'யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை' என்பதைப் போல, எடப்பாடி ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று ஊழல் செய்துகொண்டு இருந்ததால் மக்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும்; எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் ஒரு அமைச்சர், டிஜிபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் அவர்கள் கொலை, கொள்ளை குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும்; ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு (Thoothukudi Shooting Case) சம்பவத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என எடப்பாடி பழனிசாமி அப்போது கூறியதாகவும், அதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை அறியலாம் என்றார்.
நீங்கள் எத்தனை முகமூடிகள் போட்டுக்கொண்டு வந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் (Erode East By-Election) அதிமுக இருக்கின்ற இடம் தெரியாது என்பது உறுதி எனத் தெரிவித்தார்.
’ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியானது அதிமுகவிற்கு சரியான பாடத்தைப் புகட்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, ஆர்.கே.நகர், நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக அமைச்சராக இருந்த யாரும் செல்லவில்லையா? இவ்வாறு அனைத்து தவறுகளையும் எடப்பாடி பழனிசாமியில் ஆட்சியில் செய்துவிட்டு தற்போது திமுக மீது பழி சுமத்துகிறார்’ எனத் தெரிவித்தார். மேம்பாலம் போன்ற பல திட்டங்களை முடிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்; ஒரு திட்டத்திற்கு ஆரம்பத்தில் சரியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்திருந்தால் தாமதம் வந்திருக்காது எனவும்; கடந்த அதிமுக ஆட்சி தான் இதற்கும் காரணம் என்றும் சாடினார்.
'திமுக ஆட்சியில் பல திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை சட்டப்பேரவையில் காண்பித்தபோது, எதிர்க்கட்சியினர் ஏன் அமைதியாக இருந்தனர்' என்று கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசின் நிதி பொறுப்புடைமை சட்டத்தை மீறி, அதிமுக ஆட்சியில் வாங்கியுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் காரில் கெத்தாக வலம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்எல்ஏ!