சென்னை: மூதறிஞர் ராஜாஜியின் 50-வது ஆண்டு நினைவு சிறப்பு புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இன்று (டிச. 25) தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் அறிவுறுத்தலுக்கு முன்னதாகவே இந்தியாவில் முதல்முறையாக சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, தைவான், ஹாங்காங் போன்ற 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறையின் அலுவலர்கள் கூட்டத்தை நடத்தினார். அப்போது ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தினார்.
நேற்றைக்கு முன்தினம் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களின் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துகொண்டோம். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினோம் என்றார்.
தமிழ்நாட்டில் 24 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய விமான நிலையங்களில் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்றிய அமைச்சரின் ட்விட்டரில், சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக துறைக்கு வரவில்லை என்றாலும், ஒன்றிய அமைச்சரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து இன்று முதல் 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாக வராமல், வேறு நாட்டிற்கு சென்று வந்தாலும், அந்த பயணிகளையும் 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம் என கூறினார்.
முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவது போன்ற கரோனா விதிமுறைகள் ஏற்கனவே இருக்கிறது. அதனை விளக்கிக் கொள்ளப்படவில்லை. குளிர்சாதனம் வசதி உள்ள இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. எனவே மக்கள் அவரவர் நலன் கருதி முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 4,000 முதல் 5,000 ஆர்டிபிசிஆர் (RTPCR) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 2020 மார்ச் மாதம் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டபோது தான் ஒற்றை இலக்கத்தில் இருந்தது. அதன்பின்னர் இரட்டை இலக்கத்திலேயே இருக்கிறது என தெரிவித்தார்.
அது தற்பொழுது தான் ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. கரோனா மரபணு மாற்றம் குறித்தும் பரிசோதனை செய்து வருகிறோம். பிஎப்7 என்ற வைரஸ் பிஎப் 5 என்ற வைரஸின் உள் உருமாற்றம் தான். எனவே பெரிய அளவில் அச்சம் தேவையில்லை. தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
தமிழ்நாட்டில் முதல் தவணையில் 96 சதவீதமும் இரண்டாம் தவணையில் 92 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என்றார்.
கடந்த ஆறு மாதகாலமாக தமிழ்நாட்டில் கரோனாவால் இறப்பு நிகழவில்லை. இந்நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: கண்ணும் கருத்துமாக பணிகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்