சென்னை: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று (மே 16) உணவு பாதுகாப்பு துறை, குடும்ப நலத்துறை, காசநோய் தடுப்பு திட்டம், தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஆகிய துறை ரீதியிலான அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் பேசுகையில், அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும்; ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமம் முறையாக புதுப்பிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் , இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள் ஆகிய உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்;
அனைத்து நியமன அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் தொழு நோய் திட்ட நடவடிக்கைகளை சிறப்பாக கையாள மாவட்டங்களுக்கு மேலும் 28 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், வரும் 2025ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தை தொழு நோய் அற்ற மாநிலமாக உருவாக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் சிறப்பு அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பேருந்து கட்டணம் உயருமா? - குழப்பமும் விளக்கமும்