சென்னை: நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை இரண்டாவது கூட்டத்தொடர் நேற்றைய முன்தினம் (அக்.9) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளும், கடைசி நாளான இன்று (அக்.11) காலை 10 மணிக்கு பேரவை கூடியது.
இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அந்த வகையில், ஓட்டுநர் நடத்துநர் பணி நியமனத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கரோனா காலத்தில் பல்வேறு பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா எனவும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கரோனா காலத்தால் நிறுத்தப்பட்ட பேருந்துகள் கரோனா பாதிப்பால் நிறுத்தப்படவில்லை என்றும், போதுமான ஓட்டுநர் நடத்துநர் இல்லாத காரணத்திற்காகவே நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், விரைவுப் போக்குவரத்துக் கழக்கத்தில் தற்போது 600 ஓட்டுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், மற்ற போக்குவரத்து கழகத்திலும் புதிய ஓட்டுநர் நடத்துநர்களை நியமிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், ஓட்டுநர் நடத்துநர் பணி நியமனத்திற்குப் பின் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை” - நாகர்கோவில் அரசுக் கல்லூரி கட்டிடம் கட்டுவது தொடர்பாக அமைச்சர் பொன்முடி பதில்!