நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில்,"கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்க சிறப்பான முறையில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி.
உள்ளாட்சித்துறை விருது
உள்ளாட்சித் துறை அலுவலர்களின் சிறப்பான உழைப்புக்கு கிடைத்த பரிசாக உள்ளாட்சித்துறை 143 விருதுகளைப் பெற்றுள்ளது. இரண்டு புயல்கள் வந்த போதும், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அலுவலர்கள் அனைவரும் சிறப்பாகப் பணிபுரிந்தனர்.
குடிநீர் திட்டப்பணிகள்
குடிநீர் திட்டப்பணிகளைப் பொறுத்தவரை 9 ஆண்டுகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் உத்தரவுகளால் தொய்வடைந்து இருந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் கூட தற்போது வேகமடைந்துள்ளன. ஒன்பது ஆண்டுகளில் ஏழாயிரத்து 620 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால் நிலையமும், 1.2 லட்சம் கிலோமீட்டர் நகராட்சியில் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளன.
டெங்கு நடவடிக்கைகள்
பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட பிற தொற்று நோய் அறிகுறிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புயல் நடவடிக்கைகள்
புயல் பாதிப்பிற்குள்ளான 26 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தேவையான அளவு குடிநீர் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
சென்னைக்கு எப்போதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், 870 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொது மக்களின் வசதிக்காக 2 லட்சத்து 77 ஆயிரத்து 64 அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிகளுடன் இணைந்து 79 ஆயிரத்து 422 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழு கடன் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வருவார்
முதலமைச்சர் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களின் தேவைகளை உணர்ந்து கரோனா காலத்திலும் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சரிசெய்கிறார். அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராவது உறுதி" என்றார் அமைச்சர் வேலுமணி.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் விளம்பரம் தேடுகிறார்: அமைச்சர் வேலுமணி