2019ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் காலியாக இருந்த பதவிகளுக்கு நேரடி பணி நியமன ஆணைகள் மூலம் நியமிக்கப்பட்டவர்களில் பணியில் சேராத இடங்களுக்கு அதே இடம் மற்றும் இட ஒதுக்கீட்டினை சார்ந்த அடுத்த மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.
பணிநியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் பணியாளர்களிடையே பேசுகையில், குடிநீர் தேவை என்பது அன்றாட வாழ்வின் அடிப்படை தேவையாகும். இப்பணிகளை மேற்பார்வையிட்டு செயலாக்க அலுவலர்கள், பணியாளர்கள் தேவையும் இன்றியமையாத ஒன்று. கடந்த 2011 முதல் 2019 வரை நேரடி நியமனம் மூலம் 248 உதவி பொறியாளர்களும், 261 இளநிலை பொறியாளர்களும், 11 பிரிவு கணக்கு அலுவலர்களும் மற்றும் 5 துணை நிதிகட்டுப்பாட்டு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கருணை அடிப்படையிலான பணிநியமனத்தில் 91 இளநிலை பொறியாளர்களும், 445 களப்பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 5 துணை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்கள், 2 முதுநிலை கணக்கு அலுவலர்கள், 158 உதவி பொறியாளர்கள் மற்றும் 155 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 320 காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி பணி நியமன ஆணைகள் மூலம் நியமிக்கப்பட்டனர்.
மேற்படி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டதில் 16 உதவி பொறியாளர்கள் மற்றும் 20 இளநிலை உதவியாளர்கள் பணியில் சேரவில்லை. அவர்களது காலிபணியிடங்களில் அதே இடம் மற்றும் இட ஒதுக்கீட்டினை சார்ந்த அடுத்த மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு அதன்படி உடல்தகுதி சான்று உறுதிமொழி பத்திரம் சமர்ப்பித்து பணியில் சேரவந்துள்ள விண்ணப்பதாரர்களில் 11 உதவி பொறியாளர் மற்றும் 14 இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு பணியிட ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.
பணி ஆணை பெற்றுள்ள பணியாளர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்ற தங்களுக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதனை பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படின் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: நிலக்கரி சாம்பல் கழிவால் பொசுங்கும் கால்கள்: நிவாரணம் கேட்கும் மக்கள்